கொவிட் -19 : மரணித்த நோயாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமானவை விளக்கம் கோரிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அரசாங்கம் அளித்த அதிர்ச்சி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொவிட் -19 : மரணித்த நோயாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமானவை விளக்கம் கோரிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அரசாங்கம் அளித்த அதிர்ச்சி


கொவிட் -19 : மரணித்த நோயாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமானவை 

விளக்கம் கோரிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அரசாங்கம் அளித்த அதிர்ச்சி 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொவிட்-19 ஜனாஸாக்கள் தொடர்பில் கடந்த வாரம், பாராளுமன்றத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம்  எழுப்பிய வாய்மூல வினாவும், அதற்கான பதிலும், அத்துடன் 2021 ஆம் ஆண்டில் அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராய்ச்சியிடம்  அவர் கேட்டிருந்த எழுத்துமூல கேள்வியும் அதற்கான பதிலும் அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கு தரப்படுகின்றன.

ரவூப் ஹக்கீம் எம்.பி.(மு.கா.தலைவர்):

அமைச்சர் அவர்களே! ,

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக எரிக்கப்பட்டவர்கள் மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பற்றி தீர்மானிப்பது தொடர்பில் ஒரு விசேட செயலணியை நியமித்திருந்ததாகக் கூறினீர்கள். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடத்தின் பேராசிரியையொருவர், வைரஸ்கள் நிலக்கீழ் நீரினால் பரவுவதான ஒரு வதந்தியை பரப்புவதில் முன்னிலை வகித்தார் . அது நீங்கள் கூறியது போல, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் உடல்களை பெரும் எண்ணிக்கையில் வெகு தூரத்தில் உள்ள ஓட்டமாவடிக்கு, இந்த விஞ்ஞானபூர்வமற்ற மற்றும் நியாயமற்ற, இனவாத கொள்கையின் அடிப்படையில் கொண்டு செல்ல வழி வகுத்தது. ஆகையால், இப்போது இந்த வைரஸ்கள் நீரினால் பரவுவத ல்லை என விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு, தொற்றுநோயியல் நிபுணர்கள், வைரஸ்கள் இறந்த உடலில் உயிர் வாழ்வதில்லை, இறந்த கலன்களில் அவை இருப்பதில்லை என நன்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கத்தக்கதாக, அரசாங்கம், துறைசார்ந்த இனவாதிகள் சிலரை  இந்தச் செயலணியில் நியமித்திருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல:

கௌரவ உறுப்பினரே! ,

நான் அப்போது சுகாதார அமைச்சராக இருக்கவில்லை. அப்போதைய  ஊடக அமைச்சர் என்றவகையிலேயே நான் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தேன். ஆனால், இந்த விவகாரத்தோடு முழுமையாக சம்பந்தப்பட்டிருந்தேன்.  நீங்கள் சரியாக சுட்டிக்காட்டியவாறு உரிய விடயங்கள் தொடர்பான துறைசார்  விற்பன்னா்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ந்து தீர்மானம் எடுக்கச் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் உங்களோடு உடன்படுகின்றேன். பேராசிரியர்கள் கூட தவறிழைத்தி ருக்கின்றார்கள். ஆனால், அவை சீர் செய்யக் கூடியதான தவறுகள். துறைசார் நிபுணர்கள் என்ற வகையில் நீங்கள் கூறுவது போல அதிகமானோர் உலக சுகாதார நிறுவத்தின் வழிகாட்டலோடு இணங்கினார்கள். ஆனால், மெத்திகா விதானகே என்ற அரகலயவில்  (ஆர்ப்பாட்டம் )ஈடுபட்ட பேராசிரியை அதற்கு எதிராக இருந்தார்.  இணாங்காது விட்டால் தான் தொழிலை விட்டு வெளியேறுவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி  : 

அந்த பேராசிரியையின் பெயரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை நீங்கள் இப்போது அந்தப் பெயரைக்  கூறினீர்கள். அது நல்லது. தவறான முன்னெடுப்பின் ஊடாக ஒரு தவறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். நிறையப் பேர் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கின்றனர். அவர்கள் இன ரீதியாக அநீதியிழைக்கப்பட்டுள்ளனர். ஆகையால், சம்பந்தப்பட்ட நிபுணர்களுக்கு எதிராக இழப்பீட்டு வழக்குத் தொடுக்க அருகதையிருக்கின்றது . பவித்ரா வன்னியாராய்ச்சி அமைச்சராக இருக்கும்போது இது பற்றி அவரிடம் கேட்டபோதெல்லாம் அவர் பந்தை நிபுணர்கள் குழுவின் பக்கம் திருப்பிவிட்டார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

அவரைக் குறைகாண முடியாது. அவர் ஒரு சட்டத்தரணி. ஒரு துறைசார் நிபுணர் அல்லர். நிபுணர்கள் எனப்படுபவர்கள் தவறாக வழிநடத்தியதை ஏற்றுக் கொள்கின்றேன்.

ரவூப்ஹக்கீம் எம்.பி:

அமைச்சரே! இவ்வாறு நீங்கள் அரசாங்கத்தின் தவறை பகுதியளவிலேயே ஏற்றுக் கொள்கிறீர்கள். இப்போது இந்த விடயம் தவறான தீர்மானம் என பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்களை கஷ்டப்பட வைத்ததற்காக அரசாங்கம் அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமா?

தூர பிரதேசமான ஓட்டமாவடிக்கு உடல்களை கொண்டுசென்றது மட்டுமல்லாமல், இராணுவத்தை  பின்தொடர வைத்து அவை அங்கு கொண்டு செல்லப்பட்டன.  உறவினர் இருவரே அடக்கம் செய்யும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பெரும் தொகையான அரசாங்க பணம் வீணாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இவ்வாறிருக்க,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராய்ச்சியிடம் கேட்ட எழுத்து மூல கேள்வி யொன்றிக்கு அவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதிலளிக்கும் போது, 2021 மார்ச் 19ஆம் திகதி வரை கொவிட் 19 வைரஸ் தொற்று காரணத்தினால்  மரணித்தவர்களின் எண்ணிக்கை 546 என்று தெரிவித்துள்ளார். கேள்வியில் அடங்கியிருந்த ஏனையவற்றை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக மறுத்துள்ளார். வேண்டப்படும் தகவல் மற்றும் ஆவணங்களில் மரணித்த நோயாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளடக்கி உள்ளதால் அவை இரகசிய தகவல்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 (ஆதாரம் 21. 3 .2021 பக்கம் 739 தொடக்கம் பக்.742) ஹன்சாட்)

அப்போது ரவூப் ஹக்கீம் எம்பி கேட்டிருந்த கேள்விகள்:

(அ) (1), கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை உயிரிழந்த ஆட்களின் எண்ணிக்கை யாது ?

(2) மேற்படி ஒவ்வோர் ஆளினதும் பெயர் ,முகவரி, உயிரிழந்த திகதி, உயிரிழக்கும் போது வயது, உயிரிழந்த இடம், சடலங்களை இனம் கண்டுள்ள நெருங்கிய உறவினர்களின் பெயர், மேற்படி சடலங்கள் தகனம் செய்யப்பட்ட இடம் மற்றும் தகனம் செய்யப்பட்ட திகதி என்பன தனித்தனியே யாவை?

 (3) மேற்படி உயிரிழந்த ஒவ்வோர் ஆளினதும் மரணம் பதிவு செய்யப்பட்ட திகதி, பதிவு இலக்கம் மற்றும் பிரிவு என்பன தனித்தனியே யாவை?

(4) மேற்படி உயிரிழந்த ஒவ்வோர் ஆளினதும் மரணச் சான்றிதழின் தலா ஒரு பிரதி வீதம் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? 

(ஆ)இன்றேல் ஏன்?

அவற்றிற்கு அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராய்ச்சி அளித்த பதில்கள்:

(அ)  (1)கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக 2021 .03.19ஆம் திகதி யாகும்போது இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆகும் .

(2)சமர்ப்பிக்க முடியாதுள்ளது. (3)சமர்ப்பிக்க முடியாதுள்ளது. (4)சமர்ப்பிக்க முடியாதுள்ளது .

(ஆ) வேண்டப்பட்டவர்களின் தகவல்கள் மற்றும் ஆவணங்களில் மரணித்த நோயாளிகளது தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன .அவை இரகசியத் தகவல்கள் ஆகும்.
என்றுள்ளது.

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி, எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் பற்றி அனைத்து விபரங்களையும் பெற்றுக் கொள்வதற்கும், தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாகவே, பொதுவாக எரிக்கப்பட்ட அனைவரினதும் தகவல்கள் கேள்விகளாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அப்பொழுது கேட்டிருந்தார் 

இன்னும் சில கேள்விகளை தாம் கேட்டிருப்பதாகவும், இந்த கொவிட்-19 ஜனாஸா விவகாரத்தில் நெடுகிலும் கூடுதலான கரிசனை செலுத்தி வருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.