இந்த நவீன யுகத்திலும் பல வருடங்களாக இலங்கையில் பெருநாள் தின பிறை பார்க்கும் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்தும் தங்களது கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதை காண முடிகின்றது.
ஒரு மனிதன், அல்லது ஒரு குழு ஒரு விடயத்தில தொடர்ந்தும் தவறிழைப்பார்களாயின், அந்த மனிதன் அல்லது குழு சம்பந்தப்பட்ட அந்த விடயத்தை கையாள்வதற்கு பொருத்த மற்றவர்கள் என்பதே அடிப்படையாகும்.
அவ்வாறானவர்கள் மக்களுக்கு தங்களால் நிறைவேற்ற முடியாத, பொறுப்பான காரியத்தில் தொடர்ந்தும் இருப்பதைவிட முடிந்தவர்களுக்கு முதலிடம் கொடுப்பதே சரியான இலக்கணமாகும்.
ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை இவை அரசியலிலும் ஆன்மீகத்திலும் தலைகீழாகவே தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
உதாரணமாக இம்முறை ரமலான் மாத தலைப்பிறையை அறிவித்தபோது அதனை அறிவித்த மார்க்க அறிஞர் தனது உரையில், லைலத்துல் கதர் இரவையும் திகதியையும் சுட்டிக் காட்டியது, நபிவழிக்கு நேர் முரணான ஒரு சிந்தனையற்ற விடயமாகும்.
இவ்வாறானவர்கள் மார்க்கத்தின் பொறுப்பான விடயங்களில் தொடர்ந்தும் பதவி வகிக்கும் போது மக்களுக்கு சரியான தீர்ப்புகள் வந்து சேர்வது கடினமானதாகும்.
இலங்கையில் பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் இவ்வாறானவர்கள் தலைமை வகிக்கும்போது மக்களுக்கு சரியான வழிகாட்டல் கிடைக்குமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இதைத் தவிர தங்களின் பதவிகளில் இருந்து இவர்கள் விலகுவதாக இல்லை.
ஷவ்வால் மாத தலைமுறை விடயத்தில் பொறுப்பான இலங்கை உலமாக்கள் பல வருடங்களாக தவறிழைத்து வருகின்றனர்.
இம்முறை இழைத்த தவறுகளை அடுத்த முறை திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்த்தால் அதுவும் நடப்பதாக இல்லை.
சென்ற வருடம் ஷவ்வால் மாதத் தலைப்பிறவிடத்தில் பிறை தென்பட்டதாகவும், இலங்கை பிறை குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இவ்விடத்தை வெளியே சொல்ல வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டிக்கொள்ளப்பட்டார்கள் என்ற செய்தியும் பின்பு அறியக் கிடைத்தது.
அதற்கு முன்னேய வருடம் கிண்ணியாவில் பிறை தென்பட்டதாகவும், இந்த விடயத்தில் பிறை குழு இரண்டாக பிரிந்து ஒரு சாரார் ஏற்றுக்கொள்ள, இன்னொரு சாரார் மறுக்க, பின்னர் கிண்ணியா மக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்தியை மக்களுக்கு ஏத்தி வைக்க நாட்டில் பெரும்பாலான மக்கள் பெருநாள் கொண்டாட இன்னும் ஒரு சாரார் நோன்பு நோற்றனர்.
இவ்வாறு அடுக்கி கொண்டு போகும் போது பல வருடங்களாக பிறைவிடத்தி விடயத்தில் இவர்கள் தவறிழைக்கின்றனர்.
பிறை விடயத்தில் எந்த மனிதனும் பொய்யாக பிறை கண்ட செய்திகளை அறிப்பதில்லை.
இதுவரை எவரும் அவ்வாறாக அறிவித்ததும் இல்லை. இவை இறையச்சத்தின் அடிப்படையில் உள்ளதாகும் .
ஆனால் இதுவரை ஏற்ப்பட்ட பிறை குழப்பங்கள் யாவும் கண்ட பிறையை
ஏற்க மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட குழப்பங்களாகும்.
அவ்வாறானால் இந்த விடயத்தில் ஒரு சாதாரண பொது மகனை
விட, மார்க்கம் படித்த உலாமாக்களே இறையச்சமின்றி நடந்து கொண்டிருப்பதை விளங்க முடிகின்றது.
ஆக இதுவரை ஏற்பட்ட பிறை குழப்பங்களுக்கு உலமாக்களே காரணமானவர்கள் என்பது புரிகின்றது.
எனவே அதி நவீன தொடர்பாடல் இருக்கும் நிலையில், இன்றைய காலகட்டத்தில், தேசிய ரீதியில் அனைத்து மக்கள் பள்ளிவாசலுடன் தொடர்புகள் உள்ள நிலையில், இந்த விடயத்தில் பொடுபோக்காக நடந்து கொள்ளாமல் இம்முறையாவது பொறுப்புடன், மக்களுக்கு குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் சரியான தீர்ப்பை வழங்குவார்களா?
கண்ணியம் மிக்க உலமாக்களே பொறுப்பாளர்களே உங்களிடன் கேட்கின்றோம்..
பொறுத்திருந்து பார்பாபோம்.
-பேருவளை ஹில்மி