இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 1995 இல் கையொப்பமிடப்பட்டது. முன்னதாக, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்புக் குழு இந்த ஆண்டு பெப்ரவரியில் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கைக்கு வந்திருந்தது.
பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு வருகைத் தந்திருந்தது.
உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த தூதுக்குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு விசேட விமானங்களில் நாட்டை வந்தடைந்தது.
இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்தநிலையிலேயே, அமெரிக்க தூதுவர் இதை விளக்கியுள்ளார்.