நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தொலைபேசிகள், தளபாடங்கள் மற்றும் காகிதாதிகள் உட்பட பல குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நேரடி வர்த்தகர்களுக்குமான அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரியெல்லவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனூடாக சூரியப்படலம், தொலைபேசி மற்றும் உதிரி பாகங்கள், தளபாடங்கள், துப்புரவு முகவர்கள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் பாகங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள், தைக்கப்பட்ட ஆடைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நேரடி வர்த்தகர்கள் தமது அதிகாரசபையின் கீழ் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நேரடி வர்த்தகர்கள் என்ற வரையறைக்குள், நடமாடு விற்பனை, வாடிக்கையாளர்களைச் சந்தித்து பேரம் பேசுதல், காட்சிப்படுத்தல், விற்பனைக்கான கட்டளையை பெறுதல் மற்றும் அதுசார்ந்த செய்பாடுகளின் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அடங்குவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நேரடி வர்த்தகர்கள் தமது வணிகப் பெயர், பதிவு எண் அல்லது நிறுவனத்தின் பதிவு எண் ஆகியவற்றைச் சமர்ப்பித்து நுகர்வோர் அதிகாரசபையின் உடனடியாக வர்த்தகராகப் பதிவு செய்ய வேண்டுமென அந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் தமது வாடிக்கையாளருக்கு, அச்சிடப்பட்ட அல்லது மின்னணு வடிவத்தில் பற்றுசீட்டு வழங்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பற்றுச்சீட்டு எண், பரிவர்த்தனையின் தன்மை (சில்லறை அல்லது மொத்த விற்பனை), பரிவர்த்தனை திகதி, விற்கப்படும் பொருட்களின் வகை, விற்கப்பட்ட பொருட்களின் அளவு, ஒரு அலகின் பெறுமதி, பொருட்களின் மொத்த பெறுமதி, தொகுதி எண் (ஏதேனும் இருந்தால்), உத்தரவாத எண் (ஏதேனும் இருந்தால்), நுகர்வோரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பிற வழிகாட்டுதல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய பற்றுச்சீட்டுகளின் நகல்களை தங்களிடம் வைத்திருக்குமாறு நேரடி வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.