இந்தியா - உத்தரபிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய குற்றக்கும்பல் உறுப்பினருமான ஆதிக் அஹமட் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் வந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடத்தல் சதித்திட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிக் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், மருத்துவ பரிசோதனையொன்றுக்காக காவல்துறையினரின் பாதுகாப்புடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன்போது, தம்மை சூழ்ந்த செய்தியாளர்களிடம் ஆதிக் கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது, அருகில்வந்த நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தக் காட்சி தொலைக்காட்சி நேரலை காட்சிகளில் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் அஹமட்டின் மகன் ஆசாத் மற்றொரு நபருடன், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அஹமட் மற்றும் அவரது சகோதர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்று சந்தேகநபர்கள் உடனடியாக சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பணிப்புரையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 03 பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசியல்வாதியான ஆதிக் அஹமட் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி, கடத்தல் வழக்கில் அஹமட் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் தொடர்பான வழக்கொன்றில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுண்டர் எனப்படும் திட்டமிடப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக இந்திய உயர் நீதிமன்றத்தில் அஹமட் மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.