சித்திரைப் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று (17) தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் QR குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை நாளை முதல் முந்தைய அளவுகளுக்கு திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 08 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 04 லீற்றரில் இருந்து 07 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் ஒதுக்கீட்டை மீள்திருத்தம் செய்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.