யாழ். நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடை என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை 2 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று (23) அனுமதியளித்திருந்தது.
அதனடிப்படையில் சந்தேகநபர் இன்று நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேகநபர் அணிந்திருந்த ஆடை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேகநபரிடம் இருந்து 03 தங்கச் சங்கிலிகள், 02 ஜோடி தங்க வளையல்கள், 08 மோதிரங்கள், 01 காதணி ஜோடி, 01 தங்கப் பென்டென்ட் என 26 பவுண் தங்கநகைகள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)