இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி, ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன அரசாங்கத்தின் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக சீன தனியார் நிறுவனமொன்றுக்கு, அருகிவரும் இனமான ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான தகவல்களை அவதானித்து வருவதாக சீனத் தூதரகத்தின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரின் விரிவான தெளிவுபடுத்தல்களையும் கருத்திற் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் மற்றும் நிர்வகிக்கும் முக்கிய அரச நிறுவனமாக சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளிகள் தொடர்பான நிர்வாகம் உள்ளது.
இந்தநிலையில், பெய்ஜிங்கில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடனும் தூதரகம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்தது.
அதன்போது, அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டில் அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.
அது வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.