பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 06 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து கலந்துரையாடிய போது, ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதுடன் தடை செய்யப்பட்டவற்றில் 06 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
அதனால் அந்த அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.