க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை குறிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 600,000 இற்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்தாமல் இருப்பது குறித்து பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த அவர், அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிக்கத் தகுதியுடையவர்கள் என்ற பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
“எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் தொழில்களை பெற்றுக் கொள்ள முடியாது என்பதும் உண்மையாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில், டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையையும் ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையையும் மீண்டும் நடத்த அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
லண்டன் சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக மாணவர்களுக்கு பெரும் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும, தனது முன்மொழிவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)