இலங்கை குரங்குகளுக்கு சீனாவில் இருந்து அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதால், நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையை மீறும் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (11) இடம்பெற்றது.
விவசாய அமைச்சர் மஹிந்த மாரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சர், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் போது, இலங்கையில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் பயிர்களுக்கு விலங்குகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரியவந்தது.
திட்டத்திற்கான சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்ய குழுவை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் சீனாவின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)