பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம் என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணி தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என்று நம்பப்படுகிறது.
கென்யாவின் மாலிண்டியில் இதுவரை 47 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள போலீஸார் வெள்ளிக்கிழமை ஷகாஹோலா காட்டில் இருந்து உடல்களை தோண்டி எடுக்கத் தொடங்கினர்.
மூன்று நாட்களுக்கு முன் வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 26 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மக்களை உறைய வைத்துள்ளது.
'இன்று நாங்கள் மேலும் 26 உடல்களை தோண்டி எடுத்துள்ளோம், இது அந்த இடத்திலிருந்து மொத்த உடல்களின் எண்ணிக்கையை 47 ஆகக் அதிகரித்துள்ளது' என்று கிழக்கு கென்யாவின் மாலிண்டியில் உள்ள குற்றவியல் விசாரணைத் தலைவர் சார்லஸ் கமாவ் கூறினார்.
47 பேரும் பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்வார்கள் என்று நம்பிய கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் என்று நம்பப்படுகிறது.
சடலங்களை தேடும் பணி தொடர்கிறது, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், குழுவைச் சேர்ந்த 15 பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்பவர்கள் என்றும், பட்டினி கிடக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்களில் 04 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மெக்கன்சியின் சீடர்களில் குறைந்தது 31 பேரின் ஆழமற்ற கல்லறைகள் இருப்பதாகக் கூறப்படும் ஒரு இரகசிய தகவலைப் பின்பற்றிய காவல்துறை தேடுதல் பணியைத் தொடங்கியது. மேலும் குறித்த தேவாலயத்தின் தலைவர் பால் மெக்கென்சி ஏப்ரல் 15 அன்று கைது செய்யப்பட்டார்.
காவல்துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டும் உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் காவலில் இருக்கும் போது மெக்கென்சி சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மறுத்துவிட்டார் என செய்தி வெளியிட்டுள்ளன.
800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஷாகஹோலா காடு முழுவதும் சீல் வைக்கப்பட்டு, குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டது என்று கென்யாவின் உள்துறை அமைச்சர் கித்துரே கிண்டிகி தெரிவித்துள்ளார்.
'பல அப்பாவி ஆன்மாக்கள் மீதான அட்டூழியத்தை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தேவாலயம், பள்ளிவாயல், கோவில் அல்லது ஜெபக் கூடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை (சுய கட்டுப்பாடு உட்பட) விதிக்கப்பட வேண்டும்' என்று உள்துறை அமைச்சர் கித்துரே கிண்டிகி கூறினார்.
கடந்த மாதம், பால் மெக்கன்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு குழந்தைகள் தங்கள் பெற்றோரின் காவலில் பட்டினியால் இறந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், 100,000 கென்ய ஷில்லிங் (700 டாலர்கள்) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.