கொரோனா இரண்டாவது அலையின் போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, அவரது உடலுக்கு குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்த நிலையில், அதே நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்த, 35 வயதுடைய கமலேஷ் பத்திதர், இவர் குஜராத்தின் வதோதராவில் பணியாற்றி வந்தார்.
கொரோனா இரண்டாவது அலையின் போது இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
கமலேஷ் பத்திதரின் சகோதரரான முகேஷ் பத்திதரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, குடும்பத்தினர் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கரோட்கலா கிராமத்தில், கமலேஷ் பத்திதரின் உறவினர் வீடு அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலை வேளை 6:00 மணிக்கு வீட்டு கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கதவை திறந்தனர்.
அங்கு கமலேஷ் பத்திதர் நின்று கொண்டிருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மற்ற உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
அனைவரும் வந்து கமலேஷைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எங்கு இருந்தார், ஏன் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என்பது உள்ளிட்ட தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
அவரிடம் முறையாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின் குழப்பம் தீரும் என, போலீசார் தெரிவித்தனர்.