சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன.
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் விலை கீழிறங்கியுள்ளது. அதனடிப்படயில், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.84 ரூபாயாகவும் விற்பனை விலை 334.93 ரூபாயாகவும் உள்ளது.
இந்நிலையில், எரிபொருள் நுகர்வோருக்கு அடுத்தமாதம் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி கூடியுள்ளது. ஆகையால், எரிபொருள்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் காஞ்சன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையை மேம்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.