சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் முன்வைத்தார்.
இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் விசேட உரையாற்றும்போது ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை சபைப்படுத்தினார்.
ஜனாதிபதி தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும்.
கடன் வசதிகளின் 4 ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளதுடன், முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஏனைய நாடுகள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிலர் இந்த கடன் வசதியை இன்னொரு கடனாகவே கருதுவதாகவும், மேலும் சிலர் நாட்டின் மொத்த கடனை பெற்ற தொகையை கொண்டு செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர்.
இந்த அறிக்கைகள் அறியாமை அல்லது அரசியல் இலாபத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.