கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹிந்தி - சீன மொழிகளில் பெயர் பலகைகள் காணப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில், இந்த விமான நிலையத்துக்கு நான் அவ்வப்போது சென்று வருபவன். ஆனால் இந்தப் பெயர் பலகைகளை ஒருபோதும் கண்டதில்லை.
நேற்று (27) இரவு சென்றபோது சிங்களம், தமிழ் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்திய, சீன மொழிகளில் மின்சாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பெயர் பலகைகளை உற்று நோக்கிய போது என் கண்ணுக்கு இவை தெரிந்தன.
அப்படியிருக்காது எனது கண்தான் ஏதோ பிழைபோல் என்று நினைத்துக் கொண்டு நன்றாக நிமிர்ந்து உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. பொருளாதார நெருக்கடிச் சூழலில்தான் விமான நிலையத்தில் ஹிந்தி, சீன மொழிகளிலும் பெயர் பலகைகள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கொள்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன ஹோட்டல்கள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை ஏற்கனவே தெரிந்த கதை. அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழிதான்.
ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை. கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக நான் காணவில்லை.
ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகளை இன்று கண்டேன்.
இந்தியாவும், சீனாவும் இலங்கைத்தீவில் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பொருளாதார ரீதியில் எப்படிச் செயற்படுகின்றன என்பது பற்றிய விபரங்கள் எனது அரசியல் கட்டுரைகளில் உண்டு. ஆகவே இந்தப் பெயர் பலகைகள் பற்றி மேலதிக விமர்சனங்கள் தேவையில்லை.
சிறு விளக்கம் - எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்வதுதான் செய்தி. அது வீடாகவும் இருக்கலாம் நாடாகவும் இருக்கலாம் ஏன் உலகமாகவும் இருக்கலாம்.
ஆகவே இலங்கைத்தீவின் எதிர்காலம் பற்றி கீழே உள்ள செய்திப் படம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
குறிப்பாகத் தமிழர்களுக்கு, இந்திய ரூபாய்களை இலங்கையில் பயன்படுத்தலாம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்ததாகச் செய்திகள் வெளியான நாளில் ஹிந்தி மொழி பெயர் பலகை விமான நிலையத்தில் வந்ததா?
அப்படியானால் ஏன் சீன மொழியும் அந்த பெயர் பலகைகளில் இணைந்தது? 2009 இற்குப் பின்னரான சூழலில் அதுவும் 2015 இற்குப் பின்னர் இது புரியாத புதிர் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.