வனாத்தவில்லுவ பிரதேசத்தில் யாசகம் புரியும் பெண் ஒருவரின் ஒன்றரை வயது சிசுவை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் நேற்றிரவு (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட ஆண் சிசு பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மேலும் குழந்தையை ஏற்றிச் செல்வதற்கு உதவிய தரகர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தமாக இருப்பதாகவும், 7 மாத கர்ப்பகாலத்தில் குறித்த பெண் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது தனது குழந்தையை இழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் குறித்த பெண் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக வேறு ஒரு குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார், இதன் காரணமாக தெமட்டகொட பிரதேசத்தில் தெரிந்த நபரொருவரின் உதவியை பெற்று 300,000 ரூபாய்க்கு சிசுவை கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த நபர் குழந்தையைத் தேடி பெண்ணை தெமட்டகொட, பொரளை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், இதன் போது செருப்புத் தொழிலாளி ஒருவர் பெண் ஒருவருடன் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்த சிசு தொடர்பில் தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாசகம் புரியும் பெண் ஒப்பந்தத்திற்கு இணங்கியதால், சந்தேகநபரான பெண் 100,000 ரூபாயும், தரகருக்கு 50,000 ரூபாயும், முச்சக்கர வண்டி சாரதிக்கு 25,000 ரூபாயும், மற்ற இரு நபர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாசகம் புரியும் பெண் முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தாலும் பின்னர் அவர் மறுத்துவிட்டார். யாசகம் புரியும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கொம்பனித்தீவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த போது சந்தேகத்திற்குரிய பெண் குழந்தையை கடத்திச் சென்று வாடகை வாகனத்தில் வனாத்தவில்லுவைக்கு திரும்பியுள்ளார்.
யாசகம் புரியும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் முச்சக்கர வண்டியை சீ.சீ.டி.வி ஆதாரங்களின் ஊடாக கண்டுபிடித்ததன் மூலம் குறித்த குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
யாசகம் புரியும் பெண்ணும் அவரது கணவரும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரும் 53 வயதுடைய சந்தேகநபர் உட்பட மற்ற ஐந்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)