அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து அறிவிக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, 070 350 0525 என்ற வாட்ஸாப் செயலி இலக்கத்திற்கு பொது மக்கள் தகவலளிக்க முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் தனியார் பேரூந்துகளுக்கு புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 40 வீதமான பேரூந்துகள் தகுதியை பெறவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப் பரிசோதனையில் தகுதியற்ற வாகனமாக இனங்காணப்படும் பட்சத்தில் குறித்த வாகனத்தின் உரிமையாளர் வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தர வேண்டும். வருகைத் தராவிட்டால் அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
அதனையும் வாகன உரிமையாளர் பொருட்படுத்தவில்லையாயின் வழமையான முறையில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.