அண்மையில் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த புகையிரதத்தின் மலசலகூடத்தில் விடப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிற்கு இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் இளம் தம்பதியினருக்கு இன்றே திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர் குழந்தையை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவித்தார்.
இதையடுத்து, குழந்தையை ஒப்படைக்கும் உத்தரவை நீதிபதி வழங்கினார்.
டிஎன்ஏ பரிசோதனைக்காக குழந்தை மற்றும் சந்தேகநபர் தம்பதியை 21ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய இளம் தம்பதிகளை தலா 5 லட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.