மொனராகலை - வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று, இன்று (21) முற்பகல் அங்கு நீராட சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கையை காவல்துறையினரும், பிரதேசவாசிகளும் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
இதற்கு முன்னர், மொனராகலை - வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில், பல்வேறு சந்தர்ப்பங்களில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குறித்த பகுதி, ஆபத்துமிக்கது என பதாகை காட்சிப்படுததப்பட்டுள்ள நிலையில், அங்கு நீராடச் சென்ற இளைஞர்களில் சிலர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.