இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (27) அறிவித்தார்.
Shell Plc உடன் இணைந்து சீனாவின் Sinopec, United Petroleum of Australia மற்றும் USA RM Parks ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மூன்று நிறுவனங்களுக்கும் 150 டீலர்களால் இயக்கப்படும் எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படும், அவை ஒவ்வொன்றும் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) இயக்கப்படுகின்றன.
இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தினாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)