சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியை இலங்கை பெற்றவுடன், அதிக டொலர் வீதம் காரணமாக அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு விரைவில் நிதியுதவி கிடைக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாவலப்பிட்டி மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாவலப்பிட்டியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், 2023 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி நாவலப்பிட்டி மாகாணசபையின் அதிகாரத்தை போட்டியிடுபவர்கள் உறுதி செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் எனவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார்.
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வாழ்க்கைச் செலவு மேலும் குறையும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)