பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகமாகும் புதிய சட்டம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (28) செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சட்டவரைவை வர்த்தமானியில் வெளியிடவும், அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலபை்பு மறுசீரமைபபு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.