உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என அரசாங்க அச்சகம் அறிவித்தமையினால் திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் தபால் மூல வாக்களிப்புக்கான ஆவணங்களை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று இடம் பெற்ற சந்திப்பின்போது தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார்
இந்த நிலையிலேயே, தபால் மூல வாக்களிப்பு திகதிகளை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படும் திகதிக்கு முன்னர் இந்த மனு மீதான விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர்கள் இடையீட்டு மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை கட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.