பல குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும், பொய்யான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபருக்கு எதிராக இரண்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒன்று அவரது உண்மையான பெயரிலும் மற்றொன்று அவர் போலிப் பெயரிலும் என தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் குடிவரவு முகவர் நிலையத்திற்கு வந்து அவரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்ததையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேகநபர், தான் இலங்கை கடற்படையில் இருந்து தப்பியோடியவர் என்றும், இலங்கை முழுவதும் 09 கொலைகளை செய்ததாகவும், அதில் ஹன்வெல்ல பகுதியில் சமீபத்தில் நடந்த கொலையும் ஒன்று என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
விசாரணையைத் தொடர்ந்து, அப்போது அறையில் இருந்த நபர் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். எனினும், சந்தேக நபர் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவ்வேளையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.