விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வெளிவருவார் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் பேசிய பழ. நெடுமாறன், இலங்கையில் ராஜபக்ஷக்களின் ஆட்சியை தோற்கடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையும், பெரும்பான்மை மக்களின் சக்தி வாய்ந்த கிளர்ச்சியும், பிரபாகரன் வெளிவர சரியான நேரமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வெடித்த இலங்கை மக்களின் போராட்டம் அவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்த சூழலில் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய ஊகங்களுக்கும், ஐயங்களுக்கு இந்தச் செய்தி உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
எனவே, தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டி கேட்கிறோம்.
பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன் என பழ. நெடுமாறன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.