சிவில் சமூக ஆர்வலர் சிரந்த அமரசிங்க கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (27) மாலை கொழும்பில் புலனாய்வுத்துறை தலைமையகத்திற்கு அருகில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சிரந்த அமரசிங்க, கறுவாத்தோட்டம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், பின்னர் போலிக்குற்றச்சாட்டுக்களில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தார்.
ஏலவே கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ' கோட்டா ஃபெயில்' என்ற வாசகத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவித்து சிரந்த அமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.