நாட்டில் 150 அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளை பிற்போடுவதற்கு சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்துடன், மருத்துவ ஆலோசனையின் பேரில் அவை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, நோயாளிகள் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு மோசமடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தனியார் மருந்தகங்களிலும் மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளை மருத்துவ ஆலோசனையின் பேரில் பிற்போடக்கூடிய சத்திரசிகிச்சைகளை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.