ஹபரணை - மின்னேரியா பிரதான வீதியின் மின்னேரியா பட்டு ஓயா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி இன்று (22) காலை யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதலில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ள போதும், அதில் பயணித்த ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகளான தம்பதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியானது ஹபரணையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்ததுடன், தேவைக்காக முச்சக்கரவண்டியை பிரதான வீதிக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அங்கு எதிர்திசையில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டியை முட்டி மோதி கவிழ்த்துள்ளது.
பின்னர் முச்சக்கரவண்டிக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பயணப்பொதிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்குள் ஹபரணை - மின்னேரியா பிரதான வீதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்ட இரண்டாவது முச்சக்கர வண்டி இதுவாகும்.
குறித்த காட்டு யானையை மின்னேரிய தேசிய சரணாலய அதிகாரிகள் வந்து வனப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர்.
பொலிஸாரின் தலையீட்டில் வெளிநாட்டு தம்பதிகள் வேறு வாகனத்தில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.