அகில இலங்கை ஜம்மீயத்துல் உலமாவின் 100 வருட நிறைவை முன்னிட்டு ஆடம்பரமான ஒரு நூற்றாண்டு விழா பண்டாரநாயக சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நாடு பூராவும் ஆங்காங்கே கிளைகள் மூலமாக பெருந்தொகையான பணம் வசூலிக்கப்பட்டு வருவதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும் .
இதனை அடுத்து நாட்டினதும் சமூகத்தினதும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு விழா தேவைதானா என பல்வேறுபட்ட தரப்பினரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து இதை மக்களிடம் நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஜம்மீயத்துல் உலமா பல்வேறுபட்ட காரணங்களை முன்வைத்து வருகின்றது.
இருந்தபோதிலும் இவர்கள் முன்வைக்கும் காரணங்கள் எதுவும் மக்களின் தற்கால நிலைக்கு பொருந்துவதாக இல்லை.
பாதுகாப்பு.
ஜமீயத்துல் உலமா பண்டாரநாயக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் விழாவை நடத்துவதற்கான முதல் காரணமாக ஜனாதிபதி, மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கான பாதுகாப்பை தங்களால் வழங்க முடியாதுள்ளது என்ற ஒரு காரணத்தை முன்வைக்கின்றனர்.
இவை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இது நமக்குரிய கடமை அல்ல.
நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர், ஒரு இடத்துக்கு விஜயம் செய்வாராயின், அவர்களுக்குரிய பாதுகாப்பை நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரே வழங்க வேண்டியுள்ளது. நாட்டின் தலைவர்களை பாதுகாப்பது அவர்களின் கட்டாயமான தலையாய கடமைகளில் ஒன்று.
நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரமே நாட்டின் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களுக்குமான விஜயங்களை மேற்கொள்வார்கள். எனவே
நாட்டு தலைவர்களை மேற்கொள் காட்டி மேற்குறிப்பிட்ட விழாவுக்கு நியாயமான
காரணமாகக் காட்டுவது ஏற்புடையது அல்ல.
நாட்டின் தலைவர்கள் ஒரு இடத்திற்கு விஜயம் செய்யும் போது அதற்கான பாதுகாப்பை நாட்டின் பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள்.
பூர்வீகம், நம்பிக்கை தன்மை
மேலும் இவ்விழாவை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பல கோடி ரூபாய் செலவில் நடத்துவதற்கான காரணம்,
எமது உரிமையை நாட்டில் உறுதிப்படுத்துதல் , எமது பூர்வீகத்தை உறுதிப்படுத்துதல், மற்றும் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இந்நாட்டின் துரோகிகள் என, சந்தர்ப்பவாதிகள் அடையாளப்படுத்தப் பட்டதையும் ஒரு காரணமாக முன்வைக்கின்றனர்.
இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரணமாகும். கடந்த காலங்களில் முஸ்லிம்கள், இந்நாட்டின் துரோகிகள், சந்தர்ப்பவாதிகள், நாட்டுப்பற்று அற்றவர்கள் என இனவாத சந்தர்ப்பவாதிகளால் அடையாள படுத்தப்பட்டனர்.
எனவே எமது பூர்வீகத்தையும், நாட்டுப் பற்றையும், முஸ்லிம்கள் நாட்டின் மீதுள்ள நம்பிக்கையையும் நாணயத்தையும் உலகத்திற்கு வெளிப்படுத்துதல் வேண்டும்.
இதேவேளை பள்ளிவாசல்கள் என்பது முஸ்லிம்களின் அடையாளத்தை பூர்வீகத்தை நாட்டில் உள்ள உரிமையை எடுத்துக் காட்டக்கூடிய முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் நமக்கு வழி காட்டிய நபியவர்கள் நீதிமன்றம் முதல் பாராளுமன்றம் வரை பள்ளிவாசல்களிலேயே நடத்திக் காட்டினார்கள்.
எனவே எமது அடையாளத்தையும் உரிமையையும் பூர்வீகத்தை யும் விழாவாரியாக எடுத்துக்காட்ட சிறந்த இடம்
பள்ளிவாயில்கள் ஆகும். எமது அடையாளங்கள் ஆரம்பங்கள் பள்ளிவாசல்கள் முதற்கொண்டே நடைபெற வேண்டும். இதுவே இஸ்லாமிய வழிகாட்டல்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் துரோகிகள் அல்ல, இந்த நாட்டின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தில் நாட்டின் ஒட்டுமொத்த விவகாரங்களில் முஸ்லிம்கள் பங்காளிகள் என்பது எடுத்துக்காட்ட சிறந்த இடம் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தை விட முஸ்லிம்களின் அடையாளமாகிய பள்ளிவாயில்கள் என்பதே மிகச் சிறந்த இடமாகும்.
எனவே முஸ்லிம் சமூகமும், மாணவ சமூகமும் பல்வேறு ரீதியிலான கஷ்டங்களையும் இன்னல்களையும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய சீர்திருத்தவாதிகள் பல கோடி ரூபாய் செலவில் இவ்வாறான விழாக்களை
ஏற்பாடு செய்தது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜம்இயாஆவின் நூறு வருட நினைவே முன்னிட்டு இதற்கா செலவழிக்கும் பணத்தில் சமூகத்திற்காக 100 வைத்தியர்களை உருவாக்க முயற்சித்திருக்கலாம், அல்லது சமூகம் பயன்படக்கூடிய வேறுவிதமான ஆக்கபூர்வமான திட்டங்களை மேற் கொண்டிருக்கலாம் .
இதைப் விடுத்து நாலு அரசியல்வாதிகளை கூட்டி, செங்கம்பளம் விரித்து மாலையிட்டு, ஒரு சிலர் முடிசூடிக் கொள்வதில் சமூகத்திற்கு எந்த நற் பலனும் கிடைக்கப்போவதில்லை.
அகில இலங்கை ஜம்மீயத்துல் உலமா என்பது பல்வேறுபட்ட துறை சார்ந்தவர்களை தன்னகத்தே கொண்டு இயங்குகின்ற ஒரு ஆன்மீக அமைப்பாகும்.
எனவே இவ்வாறானவர்களைக் கொண்டு இயங்குகின்ற இவ்வாறான ஒரு அமைப்பு
ஒரு சிலரின் தனிப்பட்ட அபிலாசைகளை நிறைவேற்ற ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.
பிழை யார் செய்தாலும் பிழை தான். எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிழைகளை சுட்டிக்காட்ட பின் வாங்க கூடாது.
எனவே செய்த பிழையை, தவறை ஏற்றுக்கொள்ளாமல், அதை நியாயப்படுத்த முயல்வது அதைவிட பெரிய தவறாகும். கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளாளேயே அகில இலங்கை ஜமீய்யத்துல் உலமா, மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
எனவே அகில இலங்கை ஜம்மீயத்துல் உலமா என்பது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரின் ஒரு சொத்தல்ல. முழு முஸ்லிம் சமூகத்தினதும் ஒரு சொத்தாகும். இதை பாதுகாக்க வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது துறை சார்ந்தவர்கள், படித்தவர்கள், உலமாக்கள் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் நியாயமான,
நீதியான, சமூகம் சார்ந்த
முடிவுகளை எட்ட முன்வர வேண்டும்.
-பேருவளை ஹில்மி