13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் இன்று பங்கேற்றார்.
இதற்காக விசேட விமானம் ஊடாக இன்று முற்பகல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி சென்றடைந்தார்.
ஜனாதிபதியின் விஜயம் காரணமாக யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் தீர்வு என்பது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் இந்த கோரிக்கையினை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
அதற்காக 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன். அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கும் விரும்புகின்றேன்.
கட்டங் கட்டமாக அந்த 13ஆவது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் அந்த காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.