மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள சான்ட்ஹர்ஸ்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெலோமி பெரேரா என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கத்தியால் குத்தப்பட்ட போது அவரது மகள் வீட்டிற்கு வெளியே வந்து, அண்டை வீட்டுக் கதவைத் தட்டி உதவி கோரியமை அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த பெண்ணின் இளம் மகள் அவர்களிடம் வந்து, "என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்" என்று கூறியதாக அயலவர்கள் தெரிவித்தாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
குறித்த சந்தேக நபர் தனது மகனையும் தாக்கியதில் மகனின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண்ணும் கொலையை செய்த அவரது கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.