உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"

1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

எதிர்பார்க்கப்பட்ட 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் அனல் பறந்தது. அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்டு ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார். இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.




இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.

இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார். இதனை பிரான்ஸ் அணி வீரர்கள் கொண்டாடி தீர்த்தனர்.




போட்டி சமன் ஆனதால் ஆட்டத்தில் கடுமையாக அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது.

அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது.

அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையை தனது தோளில் சுமந்த 35 வயதான மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். இந்த உலகக் கோப்பையை அவர் வென்றதால் அவரது விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற்றுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போட்டது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.