நாட்டில் 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.
பணியாளர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்பி, அதுகுறித்து அவசியமான தகவல்களை வழங்காத 400 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், இலங்கைக்கு பணத்தை டொலராக கொண்டுவராமல், உண்டியல் முறைமையில் தமது தரகுப் பணத்தைக் கொண்டுவந்த முகவர் நிறுவனங்களும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணியிடங்களில் பெண்கள் எதிர்நோக்கும் துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக C190 சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தொழில் அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு உள்ளிட்ட 8 துறைசார் ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் இன்று இடம்பெறுகின்றது.
இதன்போது, குறித்த கருத்தை வெளியிட்ட தொழில் அமைச்சர், C190 சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, நீதி அமைச்சருடன் இணைந்து, சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.