36 வருட அர்ஜென்டினா கனவு நிறைவேறுமா.. புதிய வரலாறு படைக்க துடிக்கும் பிரான்ஸ்.. யாருக்கு வெற்றி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

36 வருட அர்ஜென்டினா கனவு நிறைவேறுமா.. புதிய வரலாறு படைக்க துடிக்கும் பிரான்ஸ்.. யாருக்கு வெற்றி?

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் நவ.20ம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 64வது போட்டியான இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.

மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களிடையே அதிகளவில் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. எத்தனை விருதுகள், பட்டங்கள், சாதனைகள் படைத்திருந்தாலும், உலகக்கோப்பை வெற்றியை மெஸ்ஸி இதுவரை பார்த்ததில்லை. அதனால் இது மெஸ்ஸியின் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்கள்.

சாம்பியன் சாபம்

மறுபுறம் பிரான்ஸ் அணி சாம்பியன் சாபங்களை கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பென்சிமா, போக்பா என நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி இறுதிவரை வந்துள்ளதால், அர்ஜென்டினா ரசிகர்கள் சிறிது அச்சத்துடனே இருக்கிறார்கள்.

அர்ஜென்டினா அணி

இதுவரை அர்ஜென்டினா அணியின் செயல்பாடுகளை பொறுத்தவரை சவுதி அரேபியா அணியிடம் அடைந்த தோல்விக்கு பின், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்துள்ளது. போலாந்து மற்றும் மெக்சிகோ அணிகளுடன் பெரிதாக அட்டாக் செய்யவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தான் முழுமையாக இறங்கி அட்டாக் செய்தது.

தவறுகளை திருத்தும் அர்ஜென்டினா

ஆனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தான் அர்ஜென்டினா தடுப்பாட்டம் சோதனைக்கு உள்ளானது. ஏனென்றால் கிட்டத்தட்ட வெற்றி இறுதி என்ற நிலையில், கடைசி 10 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து நெதர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அரையிறுதியில் வலிமையான குரோஷியா அணியை அர்ஜென்டினா முழுமையான திட்டத்துடன் தடுத்து நிறுத்தியது. ஒவ்வொரு போட்டியிலும் செய்த தவறுகளை அடுத்த போட்டியில் அர்ஜென்டினா தொடர்ந்து திருத்திக் கொண்டே வந்துள்ளது.

அதிர்ச்சி தோல்வி

மறுபக்கம் பிரான்ஸ் அணியை பொறுத்தவரை, நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. இதன்பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில் துனிஷியா அணியிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது. அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் நட்சத்திர வீரர்கள் களமிறக்கப்பட்டும், தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

பிரான்ஸ் வெற்றி

தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் போலாந்து அணியை எளிதாக வீழ்த்தி இருந்தாலும், வலிமையான இங்கிலாந்து அணியிடம் நூலிழையில் தப்பித்து வந்தது. அதேபோல் அரையிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை மிக சுலபமாக தடுத்து நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்தது.

அர்ஜென்டினாவின் சாதகம்

ஆனால் அர்ஜென்டினா அணிக்கு இருக்கும் சாதகம் என்னவென்றால் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கோல் அடிப்பதோடு, கோலை உருவாக்கும் இடத்திலும் ஆடி வருகிறார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 வீரர்கள் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியும் மெஸ்ஸியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல் மெஸ்ஸி இல்லையென்றாலும் ஆல்வரஸ் தனி ஒரு வீரராக வேகத்தை கொண்டு சாகசங்கள் செய்ய முடிகிறது.

பிரான்ஸ் அணியின் பிரச்சினை

பிரான்ஸ் அணியில் குரூப் சுற்றுகளில் மாயாஜாலம் செய்த எம்பாப்பேவால், நாக் அவுட் போட்டிகளில் கோல் அடிக்க முடியவில்லை. அதேபோல் ஒலிவியே ஜீரூட் அடிக்கும் ஷாட்களில் 50 சதவிகிதம் அளவிற்கு கோலாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல் பாக்ஸ்-க்குள் ஆடும் போது அர்ஜென்டினா அணி வீரர்கள் பெனால்டி கொடுக்க கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஆடுகிறார்கள். ஆனால் பிரான்ஸ் அணியில் அப்படியில்லை.

யாருக்கு வெற்றி?

இதுவரை அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதியுள்ள 12 போட்டிகளில் 6 போட்டியில் அர்ஜென்டினா, 3 போட்டியில் பிரான்ஸ் அணியும் மோதியுள்ளன. மீதமுள்ள 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற அர்ஜென்டினா அணிக்கே அதிக சாதகம் என்றாலும், பிரான்ஸ் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது. இதனால் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி கூட்டணி

கிரீஸ்மேன், ஒலிவியே ஜிரூட், வரனே மற்றும் கோல் கீப்பர் லோரிஸ் ஆகியோருடன் பிரான்ஸ் அணி, இதுவரை 9 உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இவர்கள் பங்கேற்று விளையாடிய இந்த 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக் கூட்டணி, 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.