10 மணிநேர மின்வெட்டு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவில் ஏற்படும் தாமதத்தினால், ஜனவரியில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த கருத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவும் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த கருத்துக்கு பதிலளித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்,
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார்.
அதன்படி, மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான தேவையான விவரங்கள் மற்றும் அறிக்கை என்பன ஜனவரி 02 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க அமைச்சரவை மற்றும் அமைச்சராகச் செயற்பட்டு அந்தப் பரிந்துரைகளுக்கு அமைவாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அவற்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.