அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கல்வியின் பிரதான திட்டம் குறித்த வரைவு கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த அவர், நிர்வாகம் தொடர்பான தொழிநுட்பம் உரிய வகையில் செயற்படாமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல விடயங்களை கருத்திற் கொண்டே, ஆசிரிய இடமாற்றம் வழங்கப்படும்.
கற்பிக்கும் பாடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் அளவு, பாடசாலையின் ஆசிரியர் தேவை என்பவற்றை கருத்திற் கொண்டு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் ஒருவரை திடீர் என மாற்றி வேறு ஒரு இடத்தில் பணிக்கு அமர்த்த முடியாது. தற்போது ஆசியரிய இடமாற்றம் குறித்த சபையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விதமான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களின் 25 பிரதிநிதிகள் அங்கு சென்று தங்களுக்கு தேவையானவர்களுக்கு ஏற்ப இடமாற்றத்தை பெறுவதற்கு முனைகின்றனர்.
மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. தங்களது வசதியை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுகின்றனர்.
தொழிநுட்பத்தை நிர்வாக ரீதியாக உரியமுறையில் பயன்படுத்தாமையே இவை அனைத்துக்கும் பிரதான காரணமாக அமைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.