யுவதி ஒருவரை கடத்திச் சென்று வான் ஒன்றுக்குள் வன்புணர்வுக்கு உட்படுத்தி ஓடிக்கொண்டிருந்த வானில் இருந்து தள்ளிவிட்டு மரண காயத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்து, வாகன விபத்து சம்பந்தமான சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சம்பவம் காலி பட்டபொல பொலிஸில் நடந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த யுவதி சுயநினைவின்றி தற்போதும் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் அல்லது வேறு நிலைமை காரணமாக யுவதியின் மூளை விக்கமடைந்துள்ளதுடன் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டபொல பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருவதுடன் சில காலங்களுக்கு முன்னர் சந்தேக நபரை காதலித்து வந்துள்ளார். காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணம் செய்து ஒரு குழந்தையின் தந்தை என தெரியவந்ததை அடுத்து யுவதி காதல் தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார்.
யுவதியை வானில் இருந்து தள்ளி விட்ட சந்தேக நபரே யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்தவர் என யுவதியின் உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
காதல் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரமடைந்த சந்தேக நபர், யுவதியை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டு, வானில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
பட்டபொல தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு ஓடிக்கொண்டிருந்த வானில் இருந்து யுவதி தள்ளி விடப்படுவதை வானுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் வந்த யுவதியின் தாயாரது சகோதரர் கண்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை பிடித்து பட்டபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபராக பீ அறிக்கையின்றி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பீ அறிக்கையுடன் முன்னிலைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து யுவதியின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து சந்கே நபர் புதிய பீ அறிக்கையுடன் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.