பாணந்துறை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் நடத்தை தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பெண்கள் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.
குறித்த பெண்களை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ய தயாராகி கொண்டிருந்த போது, அவர்களை கைது செய்ய பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்வரவில்லை என குற்றம்சாட்டி, சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கோபமாக நடந்து கொள்வதை குறித்த காணொளி காட்டுகிறது.
சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டு, அமைதியான போராட்டங்களைத் தடுக்கும் வகையில், நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கைது செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.