இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் 'பொறுப்பட்ட தனிப்பட்ட செயலுக்கு' அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில், விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோர விரும்புவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். "நான் மிகவும் கவலையடைகிறேன், இது தொடர்பில் தேவையான மற்றும் சரிசெய்வதற்கான பொறுப்பை எனது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
வழக்கு அதன் ஆரம்ப கட்டத்திலும், நிலுவையிலும் இருக்கும் வேளையிலும் அமைச்சர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தன்மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் தான் நிரபராதி என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் சட்டத் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தனுஷ்கவின் வழக்கை கையாண்ட சட்டத்தரணி ஆனந்த அமரநாத் வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாகவும், குணதிலக்க சார்பில் சட்ட செலவுகளை செலுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்ததையடுத்து வழக்கை தொடர்வதற்காக மற்றுமொரு சட்டத்தரணி இன்று முதல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையால் பணியமர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் செயற்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர்கள் அங்கிருந்து தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.