சூரியவெவ - மஹவெலிகடர குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் காணாமல் போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
10 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல் பகுதியிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பதற்காக படகில் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் மீட்கப்பட்ட 05 பேரின் உடல்நிலை நலமாக உள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது.
காணாமல் போயுள்ள 16 மற்றும் 18 வயதுடைய இரு பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சூரியவெவ காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கடற்படையினரையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.