இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று (17) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் வினவிய போது தற்போது மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
எனினும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை மீள இணைப்பதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் மின்சார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.