மின்சார கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால் மின்சார கட்டணத்தினை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னதாக 75 சதவீத மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ள போதிலும், மேலும் 30 வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை மின் கட்டணத்திற்கும் உள்ளடக்குவதன் ஊடாக மின்கட்டணம் மறைமுகமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
எனினும் சமூக பாதுகாப்பு வரி மின்கட்டணத்துடன் சேர்க்கப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளுக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.