திலினி பிரியமாலியின் கணவர் என்று முன்னிலையான இசுறு பண்டார சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலியின் கணவர் என்று அவர் காவல்துறையில் முன்னிலையாகியிருந்தார்.
மேலும் அவர் தாம் திலினி பிரியமாலியை சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
திலினி பிரியமாலி திருமணமான பெண் என தாம் கடந்த ஜூலை மாதமே அறிந்து கொண்டதாகவும் இசுறு பண்டார தெரிவித்தார்.
அத்துடன் திலினி பிரியமாலி தமக்கு வெவ்வேறு மோசடிகளை செய்துள்ளதாகவும், தம்மிடமிருந்த பணம் மற்றும் தங்கம் என்பவற்றை மோசடியாக பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிதி மோசடி குற்றச்சாட்டில் வைக்கப்படடுள்ள திலினி பிரியமாலி போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டரா? என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட பணம் திலினி பிரியமாலியின் வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கோடி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் திலினி பிரியமாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த 05ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக வர்த்தகர் ஒருவர் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நாளை மறுதினம் வரையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவருக்கு எதிராக இதுவரையில் 11 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 09 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் ஏனைய இரண்டு முறைப்பாடுகள் நீர்கொழும்பு மற்றும் கடவத்த காவல்துறையினரிடமும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 80 மில்லியன் ரூபா பணத்தை சந்தேகநபரான பெண்ணுக்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், தமக்கு ஜானகி சிறிவர்தன என்பவரே திலினி பிரியமாலியை அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டார்.