காலி முகத்திடலில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்திற்கு எதிராக காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
காலிமுகத்திடலில் அமைதிவழி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஆர்பாட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்த போராட்டகாரர்களையும் நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆர்பாட்டம் மேற்கொள்வதற்கு முன்னர் அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்பாட்டத்தில் பங்கேற்ற ஐவர் கைது செய்யப்பட்டதோடு, 16 வயதுடைய சிறுவன் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார்.
ஏனைய நால்வரும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தினை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதற்கான காரணத்தை எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் அறிவிக்குமாறு காவல் துறை மா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.