முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீட்டர் பெற்றோல் வழங்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு தம்மால் நிவாரணங்களை வழங்க முடியாது என்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, முச்சக்கர வண்டி பயணிகளுக்கான முதல் கிலோமீற்றர் கட்டணத்தில் 20 ரூபாவை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 5 லீட்டர் பெற்றோலை 10 லீட்டராக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தை அடுத்தே இந்த தீர்மானத்தை முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சங்கம் இன்று காலை வெளியிட்டிருந்தது.
எனினும் இன்று பகல் தமது முடிவை மாற்றிக்கொண்ட, அந்த சங்கம், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லீட்டர் பெற்றோல் வழங்கப்பட்டால் மாத்திரமே, பயணிகளுக்கு கட்டணக் குறைப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.