நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (31) சான்றுப்படுத்தினார்.
அதன்படி இந்த சட்டத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைவை கொண்டுவந்திருந்தது. எனினும், அதற்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியமென உயர்நீதிமன்றம் வியாக்கியானத்தில் அறிவித்தது.
இந்நிலையில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 20 மற்றும் 21ஆம் திகதிகளில் குறித்த திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
அதில் இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தம் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது.
எனவே, 22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாக உள்வாங்கப்படுகிறது.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்பு சபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் வழங்குகிறது.
அத்துடன், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையும் இந்த திருத்தம் தடை செய்கிறது.
மேலும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில் இந்த திருத்தச் சட்டம் உருவாகியுள்ளது.
அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு இந்த திருத்தங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.