கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்ற கலை மன்றங்களின் செயற்பாட்டினை இன்னும் மேலோங்கச் செய்வதற்காக கலைமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக்கின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெஸான், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோத்தர் சரீீீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடல், கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய தமிழ்பேசும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்குகின்ற கலை மன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் கலை மன்றங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், அதற்கு எதிர்காலத்தில் எவ்வாறான உதவிகளை திணைக்களம் செய்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றது. செயற்பாடுகள் தொடர்பாக திணைக்கள உத்தியோகத்தர்களின் மேற்பார்வை, இவை தொடர்பாக மாகாணப் பணிப்பாளரினால் முழுமையான விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன் வருகை தந்த கலை மன்ற உறுப்பினர்கள் தங்களது கலை மன்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் அதற்குத் தேவையான நிதிசார், பொருட்கள் விடயமாகவும் தங்களது கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் மிகவும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தனர்.
முடியுமான உதவிகளை திணைக்களம் செய்யும் எனவும் அவசரமாக எதனையும் செய்ய முடியாது. இருந்தாலும் எதிர்காலத்தில் கலை மன்றங்கள் உறங்குகின்ற நிலையைத் தவிர்த்து செயற்படுகின்ற ஒரே விடயத்துக்கு நாம் வர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் ஒத்துழைத்தால் எங்கள் மாகாணத்தில் உள்ள பாரம்பரிய கலை, கலாசார விடயங்களைப் பேணிப் பாதுகாக்க கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளைப் போன்று தொடர்ந்தும் இன்னும் சிறப்பாக மேற்கொள்வதினூடாக எதிர்கால சந்ததியினருக்கும் அந்த விடயங்களை நாங்கள் முன்னளிப்பு செய்ய முடியும் என்றும் மாகாணப் பணிப்பாளர் தனதுரையில் விரிவாகப் பேசினார்.
விசேடமாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் உடன் இணைந்து நிந்தவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அஷ்ரப் உதவியோடு, மேற்குறிப்பிட்ட பிரதேச செயலகத்தின் அனைத்து கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை இந்த செயற்பாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கலை மன்றங்களின் செயற்பாடானது மேலும் சிறப்பாக அமையும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)