போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான தனிநபர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடிவருகின்றனர்.
வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் இது தொடர்பான விளம்பரங்களும் அதிகரித்துள்ளன.
ஒரு வெளிநாட்டு வேலையின் நோக்கத்திற்காக கடவுச்சீட்டு அல்லது தேவையான நிதியை வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் அனுமதிப்பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிக்க உறுதிப்படுத்தல்களைப் பெற வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க, பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் அல்லது 1989 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வமான தன்மையை பொதுமக்கள் விசாரிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மோசடி செய்பவர்களின் தகவல்களைப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.