நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் செலவிடும் பொது நிதியை சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். .
இதன்படி, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (09) பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது அந்த விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதிகள் தொடர்பில் அமைச்சு செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான சுற்றறிக்கையை ஊடகவியலாளர் பரத பிரபாஷன தென்னகோன் வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)